Friday, May 10, 2013

விஜய வருட இராசி பலன்கள் 2013-2014

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  
 
சித்திரை மாதம், 14.4.2013-ம் ஆண்டு, மேஷ லக்கினம், ரிஷப இராசியில் பிறக்கிறது விஜய வருடம். 
கண்கண்ட தெய்வமான சூரிய பகவான், மேஷம் தொடங்கி மீனம் வரையிலான பண்ணிரெண்டு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் உச்சம் பெற்று மிக பலமாக சஞ்சரிக்கும் காலம்தான் சித்திரை மாத பிறப்பாகவும், தமிழ் புத்தாண்டாகவும் அமைகிறது. 
 
சித்திரை பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது,  வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை பார்த்து வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும். 
அதுபோல, சிறப்பான சித்திரை பிறப்பன்று, தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால், செந்தில்வேலவன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று வெற்றியை தருவார். 
அத்துடன், ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லது சர்க்கரையுடன் நெய்  கலந்து உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீப ஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள். தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைப்பெற அருள் புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.  
அடுத்ததாக, உங்கள் இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். 
இதன் பலனாக, இந்த விஜய வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நடக்கட்டும். நடக்கும்.
இந்த சித்திரை பிறக்கும் ஆண்டின் பெயர் “விஜய வருடம்”. ஆங்கிலத்தில் WE என்றால் ”நமக்கு” என்று பொருள். ஜெயம் என்றால் “வெற்றி”. என்று பொருள்.  ஆகையால், இந்த விஜய வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும்.
தமிழ்புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தது நம் இல்லம் தேடி வரும். 
விஜய வருட இராசி பலன்கள்
 ஒவ்வொரு இராசிகாரர்களுக்கும் தமிழ் புத்தாண்டான விஜய வருடத்தின் முத்தான பலன்களை சில வரிகளில் சொல்லப்போகிறேன். இதோ, உங்கள் இராசிக்கு விஜய வருட பலன்கள்:-
மேஷ இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசியிலேயே, தன – சப்தமாதிபதி, பஞ்சமாதிபதியுடன், உங்கள் இராசியாதிபதி செவ்வாய் அமைந்து, இவற்றுடன் கேதுவும் அமைந்துள்ளது. செவ்வாய், உங்கள் இராசிக்கு அதிபதியாக இருந்தாலும், அவனே அஷ்டாமாதிபதியும் ஆகிறான். ஆனாலும், இந்த கூட்டு கிரகங்களை லாபாதிபதி சனி நோக்குவதால், உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். எதிர்பாரா தனவரவு உண்டு. இதுவரையில் தடைப்பட்ட திருமண முயற்சிகளுக்கு பலன் கிடைத்து நல்ல வரன் அமையும். உங்கள் இராசிக்கு தன ஸ்தானம் என்கிற 2-ம் இடத்தில் விரையாதிபதி இருப்பதால், சற்று விரையங்கள் இருக்கும். வீண் செலவுகளை முடிந்தளவில் குறைத்துக்கொள்ளுங்கள். இடப்பெயர்ச்சியும் இருக்கும்.
ரிஷப இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் ஜென்மத்தில் குரு அமைந்து, உங்கள் இராசிக்கு 3-ம் அதிபதி சந்திரன், உங்கள் இராசியிலேயே அமைந்துள்ளார். அத்துடன், விரைய ஸ்தானத்தில் சுகாதிபதியும், விரையாதிபதியும், ஜென்மாதிபதி சுக்கிரனும் அமைந்துள்ளனர். இந்த சுக்கிரனே உங்கள் இராசிக்கு 6-க்குரியவன் ஆகிறான். லாப ஸ்தானத்தில் புதன் அமைந்துள்ள காரணத்தால், பழைய கடனகள் தீரும். ஆனாலும், சொத்து வாங்குவதில் சற்று கடன் வாங்கும் சூழ்நிலையை 6-ல் உள்ள இராகு செய்வார்.  வாகனம் - வீடு அமையும். மேல் படிப்பு தொடரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி கிடைக்கும். தெய்வ அனுகிரகம் கிட்டும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். 
மிதுன இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு 11-ல், 3-ம் அதிபதியும், 12 மற்றும் 5-ம் அதிபதியும், 6-ம் அதிபதி ஆகியோருடன் கேது லாபஸ்தானத்தில் (11-ல்) அமையப்பெற்றுள்ளனர். இந்த கூட்டு கிரகங்களின் பலனால் புகழ்- கீர்த்தி உண்டாகும். எதிர்பாரத பண வரவும் உண்டு. புதிய தொழில் துவங்க செய்யும். தற்போது 12-ல் உள்ள குரு, வீண் செலவும் செய்ய வைப்பார். பஞ்சம ஸ்தானத்தில் இராகு – சனி அமைந்துள்ள காரணத்தால், பிள்ளைகளுக்கும், சொத்து விவகாரங்களிலும் செலவுகள் ஏற்படும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. வெளிநாடு செல்லும் யோகம் அமையும். நல்ல வேலை வாய்ப்பும் அமையும்.
கடக இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு 10-ல், தன-சுகாதிபதியும், ஐந்தாம் அதிபதியுடன் கேது அமைந்துள்ளார். இதன் பலனாக, தொழில் துறையில் முன்னேற்றம் தெரியும். 9-ம் அதிபதி குரு, 11-ல் இருப்பதால், அயல்நாடு வியபாரம், அன்னிய தேசத்தவரின் உதவிகள் கிட்டும். சுகஸ்தானத்தில் 8-ம் அதிபதி சனி இருப்பதால், உடல்நலனில் சற்று சோர்வு உண்டாக்கும். பொறுமை நிதானம் தேவை. வீட்டை புதுப்பிப்பது, வாகனத்தை மாற்றுவது போன்றவை அமையும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். திருப்பணிகள் செய்வீர்கள். அரசாங்க வழியில் லாபம் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றமும், அவர்களின் திருமண விஷயத்தில் இருந்த வந்த தடைகள் நீங்கி, திருமண பாக்கியமும் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் உதவியால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 

சிம்ம இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் ஜென்மாதிபதியும், 10-அதிபதி மற்றும் சுகாதிபதியுடன் கேது அமையப்பெற்றுள்ளனர். பூர்வீக சொத்து கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவதிலும் கவனத்துடன் இருங்கள். கீர்த்தி ஸ்தானத்தில் சனி இருப்பதால், வழக்கு மற்றும் வீண் தொந்தரவுகளில் சுமுகமான நிலை ஏற்படும். தனாதிபதி புதன் 8-ல் உள்ளதால், நண்பர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். குடும்பத்தில் திடீர் செலவுகளும் உண்டு. 10-ல் பஞ்சமாதிபதி குரு உள்ளதால், பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையும் பஞ்சு போல் பறக்கும். திருமண தடை அகலும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  
கன்னி இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு 12-ம் அதிபதி, தனாதிபதி, மூன்றாம் அதிபதி இவர்களுடன் கேதுவும் இணைந்து இவர்கள் அனைவரும் 8-ம் இடத்தில் அமைந்துள்ளனர். இந்த கிரக அமைப்புகளால் கெடு பலன்கள் தருமா? அல்லது நல்லவை தருமா? என்றால் நன்மையே செய்யும் எனலாம். காரணம், 12-ம் அதிபதி 8-ல் இருப்பதால், விபரீத யோகம் தரும். ஆகவே அரசாங்கத்தால் ஆதரவும், உதவிகளும் கிட்டும். பெரிய பிரச்சினைகளும் அமுங்கி விடும். பயணங்கள் அதிகரிக்கும். உறவினர் பகை அகலும். பாக்கிய குரு சுபங்களை வாரி வழங்குவார். ஆனாலும், சனி வம்பை தருவார் உஷாருடன் இருங்கள். கொடுத்த வாக்கில் கவனம் - நிதானம் தேவை. 
துலா இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு சப்தமத்தில் 11-ம் அதிபதியும், ஜென்மாதிபதியும் இவர்களுடன் தனாதிபதி செவ்வாயுடன் கேது இணைந்து சப்தமத்தில் இருப்பதால், பொருள் வரவும், அயல்நாடு வேலை வாய்ப்பும் கிடைக்கும். திருமண தடை நீங்கும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் ஆதாயம் உண்டு. சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. 12-க்குரியவன் புதன் 6-ல் இருப்பதால் ரோக நிவர்த்தி உண்டு. ஜென்ம சனி இருப்பதால், அவசரம் பரபரப்பு கொடுக்கும். அமைதியுடன் இருப்பது நல்லது. ஆவேசம் கூடாது. கூட்டு தொழில் தற்போது வேண்டாம்.  
விருச்சிக இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு சப்தாமாதிபதி, ஜென்மாதிபதி, ஜீவனாதிபதி இவர்களுடன் கேதுவும் சேர்ந்து 6-ல் இருப்பதால், தொழில் துறையில் சற்று நிதானத்துடன் செய்ல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். ஆனாலும், கடன் பிரச்சினை சற்று குறையும். குடும்பத்தில் வீண் விரையங்கள் ஏற்படும். பஞ்சமத்தில் புதன் இருப்பதால், தெய்வ அனுகிரகத்தால் கௌரவ பாதிப்பு ஏற்படாது. 2 மற்றும் 5-க்கரிய குரு சப்தமத்தில் இருக்கிறார். கூட்டு தொழில் அமையும். நண்பர்கள் உறவினர்கள் உதவி கிட்டும். மேல் படிப்பு அமைய வாய்ப்பு உண்டு.
 
தனுசு இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு லாபாதிபதி, பாக்கியாதிபதி, பஞ்சமாதிபதி இவர்களுடன் கேது அமைந்துள்ளார். புத்திரர்களுக்கு திருமண பாக்கியமும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். அரசாங்க ஆதரவும் உதவியும் அமையும். ரோக நிவர்த்தி உண்டு. தந்தை வழியில் உதவி பெறுவீர்கள். கூட்டு தொழில் சற்று பிரச்சனை வரலாம். கடன் விஷயத்தில் கவனம் தேவை. தேவை இல்லா கடன் வாங்க வேண்டாம். இருப்பினும், இந்த விஜய வருடத்தில் லாப சனி யோகத்தை செய்யும்.  
மகர இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு 5-ம் அதிபதி, 8-ம் அதிபதி, சுகாதிபதி ஆகியோருடன் கேது கூட்டணி சேர்த்து சுகஸ்தானத்தில் இருப்பதால், இடப்பெயர்ச்சி உண்டு. வீடு, மனை வாங்கினாலும் சரியான சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. கல்வி தடை நீங்கும். உத்தியோக உயர்வு உண்டு. குடும்ப சச்சரவுகள் தீரும். சகோதர ஒற்றுமையும், ஆதாயமும் உண்டு. மனைவி வழியில் லாபம் உண்டு. ஜாமீன் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கூட்டு தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் குறைவாக இருக்கும். தனியாக தொழில் அமையும். இந்த விஜய வருடத்தில், பஞ்சம குரு யோகத்தை செய்வார்.
 
கும்ப இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு 10-ம் அதிபதி, சுகாதிபதி, சப்தமாதிபதி இவர்களுடன் கேது பகவானும் இணைந்து கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்துள்ளனர். எடுக்கும் முயற்சிகளும், வேலைகளும் வெற்றியாக அமையும். மகிழ்ச்சி பொங்கும். திருமண விஷயங்கள் சுமுகமாக அமையும். ரோகம், நிவர்த்தி ஆகும். வெளிநாடு செல்லும் பாக்கியம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூல் ஆகும். கூட்டு தொழில் லாபமாக அமையும். பெருமை தரக்கூடிய வாழ்க்கை தரம் அமையும். 2-ல் அமைந்த புதன், வாக்கு பலிதம் தருவார். நீங்கள் சொல்வது பலிக்கும். அதனால் நல்லவற்றை மட்டும் பேசுங்கள். தெய்வ அனுகிரகம் கிட்டும்.
 
மீன இராசி அன்பர்களே... இந்த விஜய வருடத்தில், உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் புதன், தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில், 3-ம் அதிபதி, 6-ம் அதிபதி, மற்றும் தனாதிபதி, அதாவது, சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் கேதுடன் இணைந்துள்ளனர். இது யோக நேரமாக அமைகிறது. பல நாட்கள் இருந்த வந்த கடன் தொல்லை, நோய் நொடிகள் தீரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். திருமண பாக்கியம் அமையும். தெய்வ அனுகிரகத்தால் மற்றவர்களின் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும். பண வரவு நன்கு அமையும். புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்கள், நல்ல வேலை கிடைக்கும்வரையில் ஏற்கனவே இருக்கும் வேலையை விட வேண்டாம். கோயில் திருப்பணிகளில் ஈடுபாடும், அதனால் இறைவனின் அருளும் பெறுவீர்கள். இந்த விஜய வருடம், ஜெயம் தந்திடும்.

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved