Wednesday, March 2, 2016

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் சிறப்பு கட்டுரை



07.03.2016அன்று மகாசிவராத்திரி!

Written by Niranjana

சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம்.

வேடன்
சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒருநாள் வேட்டைக்கு சென்றபோது எந்த மிருகமும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பினான். வேடனின் வயதான பெற்றோர், குழந்தைகள், வேடனுடைய மனைவி ஆகியோர் அன்று உணவு இல்லாததால் பசியால் அவதிப்பட்டார்கள்.

நாளை எப்படியாவது வேட்டையாடி ஒரு மிருகத்தையாவது வீட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று தீர்மானத்துடன், மறுநாள் காட்டுக்கு சென்றான். தன் தாகத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, ஓடை பக்கமாக வந்து பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெரிய வில்வமரத்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டான். ஏதாவது ஒரு மிருகம் கண்டிப்பாக இந்த வழியாக வரும் என்பது அவன் எதிர்பார்ப்பு.

முதல் ஜாமத்தில் ஒரு மான் வேடன் கண்ணில்பட்டது. அதை கண்ட வேடன், வில்லை எடுத்து மானை குறி வைத்தான். அப்போது தன் தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்த பாத்திரம் அசைந்ததால், சிறிதளவு தண்ணீர் வில்வமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்ல இலையும் எதர்ச்சையாக சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பது போல் விழுந்தது. வேடன் தன்னை குறி வைத்ததை அந்த பெண் மான் பார்த்துவிட்டது.

என்னை கொல்வதற்கு முன் ஒரு உதவி செய். நான் என்னுடைய வீட்டுக்கு சென்று என் குழந்தைகளை பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்.” என்றது. மிருகங்களின் மொழி அறிந்த வேடனும், “நீ திரும்பி வருவாய் என்று உன்னை நம்புகிறேன். ஆனால் நீ என்னை ஏமாற்றினால், உன் குட்டிகளையும் சேர்த்தே கொன்றுவிடுவேன்.” என்று எச்சரித்து அனுப்பினான்.

மான் பேசும் மொழியை வேடன் எப்படி புரிந்துக் கொண்டான்? என்று சிலருக்கு கேள்வி எழலாம். பல யுகங்களுக்கு முன்பு எத்தனையோ அற்புதங்கள் ஆற்றல்கள் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் மிருகங்களின் சப்தத்தை ஒரு மொழியாக புரிந்துக்கொள்வதும்.

சரி நாம் கதைக்கு வருவோம். அந்த பெண் மான், வேடனிடம்திரும்ப வருவேன் என்னை நம்புஎன்ற கூறிவிட்டு சென்றது. வேடனும் அந்த பெண்மானுக்காக காத்திருந்தான். அந்த மான் கிடைத்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் இன்று ருசியாக சாப்பிடுவார்கள் என்று ஆனந்த கனவில் இருந்தான்.


இரண்டாவது ஜாமம் வந்தது. அந்த பெண்மான் வருவது போல தெரியவில்லை. இதனால் கோபமாக தூங்காமல் மரத்தின் மேல் அசைந்து அசைந்து உட்பார்ந்தான் வேடன். அப்போதும் வேடனின் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் மீண்டும் வில்லமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்லஇலையும் அந்த சிவலிங்கத்தில் பட்டது.

அந்த நேரத்தில் ஒரு ஆண் மான் வருவதை கண்ட வேடன், அந்த மானை குறி வைத்தான். இதை பார்த்த அந்த ஆண் மானும் தப்பி ஓடி முயற்சிக்காமல் வேடனிடம் பேச ஆரம்பித்தது.
வேடனே எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்.” என்றது. இதை கேட்ட வேடன் படுகோபமாக வில்லை எடுத்தான். அந்த நேரம் மூன்றாம் ஜாமம். மீண்டும் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டு, வில்ல இலையும் லிங்கத்தின் மேல் பட்டது.

மானை பார்த்த வேடன் கோபமாக, “நான் ஏற்கனவே ஒரு பெண் மானிடம் ஏமாந்தேன். மீண்டும் ஏமாற மாட்டேன். உன்னை கொல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.” என்றான் வேடன்.

ஸ்ரீ ராமருக்கு உதவியவன்

இரு இரு. சற்று பொறு. என்னை நம்பு. நான் சிவபக்தன். அதுவும் இன்று சிவராத்திரி. நீ இருக்கும் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வழிபடவே வந்தேன். சிவ பக்தன் ஆகிய நான் பொய் சொல்ல மாட்டேன்.” என்றது ஆண் மான். இதை கேட்ட வேடன், பரிதாபபட்டு, “சரி போ. ஆனால் சீக்கிரம் வந்துவிட வேண்டும்.” என்ற நிபந்தனையுடன் ஆண் மானை அனுப்பினான்.

நான்காவது ஜாமத்திலும் வேடன் நித்திரை இல்லாமல் தண்ணீர் குடிக்கலாம் என்று அருகில் இருந்த பாத்திரத்தை எடுக்கும் போது, அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. மீண்டும் வில்லஇலையும் மரத்தில் இருந்து உதிர்ந்து சிவலிங்க திருமேனில் விழுந்தது.

அப்போது, ஆண்மானும் பெண்மானும் சொன்னதுபோல் வேடன் முன்னே வந்து நின்றது.

வேடனேநாங்கள் சொன்னது போல வந்துவிட்டோம். நீங்கள் எங்களை கொன்று சாப்பிடுங்கள்.” என்றது மான்கள்.

மான் கூறியதை கேட்ட வேடன், “சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டீர்கள். மிருகங்களான உங்களுக்கே நேர்மை இருக்கும்போது, நான் மனிதன் என்பதை நானும் நிரூபிக்க வேண்டும். அதனால் உங்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பத்திரமாக திருப்பி செல்லுங்கள்.” என்றான் வேடன்.

வேடன் சொன்னதை கேட்ட ஆண் மானும் பெண் மானும் துள்ளிக் குதித்தபடி வில்வமரத்தை மகிழ்ச்சியுடன் சுற்றி வந்து ஓடி மறைந்தது. அந்த மான்களின் மகிழ்ச்சியை கண்டு வேடன் மிகவும் மகிழ்ந்தான்.

பிறகு, “ஈஸ்வரா…” என்று வாய் திறந்து சொல்லி மரத்தில் இருந்து இறங்கினான் வேடன். அந்த சமயம், சிவபெருமான் தோன்றினார். இறைவனை நேரில் கண்ட வேடன் அதிர்ந்து போனான்.

குருத்ருஹன். உன்னை அறியாமல் நீ சிவபூஜை செய்தாய். அத்துடன் என் நாமத்தையும் உச்சரித்தாய். உன் பாவ கர்மாக்கள் தீர்ந்தது. இனி வறுமை இல்லாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வாய். அடுத்த பிறவில் நீ குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமரை தரிசித்து, பிறவி இல்லா பெருவாழ்வை பெறுவாய்.” என்று ஆசி வழங்கினார் ஈசன்.

இதை, நைமிசாரணியவாசிகளிடம் சொன்னார் சூத முனிவர்.

வேடன், ஒரு மகாசிவராத்திரி அன்று தன்னை அறியாமல் பூஜை செய்ததற்கே நல்ல பலன் பெற்றான். ஆனால் பல வருடங்கள் மகாசிவராத்திரி பூஜை செய்கிறோம் எங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று சிலருக்கு கேள்வி எழலாம்.

வங்கியில் லோன் போட்டு வீட்டை வாங்குகிறீர்கள். சில கடன் ஐந்து வருடங்கள் இருக்கும். சில கடன்கள் பத்து-பதினைந்து வருடங்கள் இருக்கும். நீங்கள் தவனையை சரியாக கட்ட கட்ட கடன் சுமை குறைவதை போல, நாம் மகாசிவராத்திரி வழிபாடு செய்ய செய்ய நம் நீண்ட கால கர்மவினை படிபடியாக குறையும். கடன் தீர்ந்தால் சொத்து திரும்ப கிடைப்பதை போல, கர்மவினைகள் தீர்ந்தால் தலைமுறை தலைமுறையாக இராஜயோக வாழ்க்கை அமையும்.

வீட்டில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பவர்கள், சிவலிங்கத்தின் நான்கு ஜாமத்திலும் மலர்கள், பன்னீர், வில்வ இலைகளால் பூஜிக்க வேண்டும். நான்கு ஜாமத்திலும் பூஜிக்க முடியாதவர்கள், இரவு பண்ணிரெண்டு மணிக்கு சிவபூஜை செய்தாலு்ம் பலன் கிடைக்கும். மறுநாள் சிவாலயம் சென்று வழிபடுபவது இன்னும் நல்லது.

முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார்.

ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார்.

சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.

மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, “ஓம் நமசிவாயஹர ஹர மஹாதேவஎன்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved