Tuesday, May 10, 2016

தொலைந்த நிம்மதி திரும்ப தரும் திருநள்ளாறு




Written by Niranjana




ஒருவர் அதிக வசதியோடு இருந்தால்,  “அவனுக்கு என்னய்யா சுக்கிர திசை.“ என்பார்கள். அதுவே உடல் மெலிந்து கருத்து போய் வறுமை அடைந்தவரை பார்த்தால், “இது எல்லாம் ஏழரை சனியால் வந்த தொல்லை. சும்மா வாட்டி வதைக்கும் பாவம்.“ என்று கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சனிஸ்வரர், மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த விக்கிரமாதித்தனையே, ஒரு வேலைக்காரனை போல் மாற்றிவிட்டார் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு.

காடாறு மாதம் நாடாறு மாதம் என்று இருந்தாலும் யாருக்கும் அடிமையாக இல்லாமல் அரசனாகவே இருந்தார் விக்கிரமாதித்தன். “உன் ஜாதகப்படி இன்னும் சில நிமிடத்தில் ஏழரை சனி பிடிக்கப்போகிறது, சனி பகவானிடம் அன்பாக பேசு. நீ என்னுடைய பக்தனாக இருந்தாலும், சனிஸ்வரர் தரும் இன்னல்களில் இருந்து தப்பிக்க முடியாது. நீ பொறுமையாக அனுபவித்துதான் ஆக வேண்டும்.“ என்றாள் விக்கிரமாதித்தனின் இஷ்ட தெய்வமான மகாகாளி.

காளிதேவி கூறியது போல், சனிபகவான் விக்கிரமாதித்தன் முன் தோன்றினார். “விக்கிரமாதித்தாஉன் ஜாதக விதிப்படி ஏழரை ஆண்டுகள் உன்னை ஆட்டுவிக்க வந்திருக்கிறேன். நீ இன்றுமுதல் என் பிடியில் மாட்டினாய்என்றார் சனிபகவான்.

 “சிவபெருமானையே அதிர வைத்த சனீஸ்வரரே. தாங்கள் தர்மவான். நீதி தேவன். நான் அறிந்து யாருக்கும் எந்த துன்பமும் செய்யவில்லை. ஆகவே தாங்கள் என்னை பிடித்தாலும் வாட்டி வதக்கினாலும் பரவாயில்லை. ஆனால் என் நாட்டு மக்களை நீங்கள் எந்த தொல்லையும் செய்யக் கூடாது. இதுவே தஙகளிடம் நான் வேண்டுவதுஎன்றான் விக்கிரமாதித்தன்.

 “உன் விருப்பப்படி ஆகட்டும். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நீ அரசனாக இருந்தாலும், உன் அதிகாரத்தின் கீழ் இருக்கும் மதுராபுரி சிற்றரசன் மதுரேந்திர ராஜாவிடம் வேலைகாரனாக பணி செய். ஏழரை வருடம் முடியும் முன்னதான ஏழாவது நிமிடம், நீ அவனுக்கு வெற்றிலை துப்பும் பாத்திரத்தை எடுத்து கொடு. இது பிறருக்கு சாதாரணமான செயலாக இருந்தாலும், பேரரசரான உனக்கு கீழே அடிமை போல் இருக்கும் மதுரேந்திரனிடம் நீ அடிமை வேலைக்காரனாக இருப்பது, உனக்கு அவமானத்தை கொடுக்கும். இருந்தாலும் என்னால் உனக்கு பெரிய இன்னல் வரக்கூடாது என்று நீ நினைப்பதாலும் மகாகாளியின் அன்பை பெற்ற பக்தனாக நீ இருப்பதாலும் உனக்கு நான் தரும் சிறு தொல்லை இது.“ என்றார் சனிபகவான்.

 இப்படி சனிஸ்வரரால் விக்கிரமாதித்தன் மட்டுமல்ல நள சக்கரவர்த்தியும் அவதிப்பட்டார். நளனை பிடிக்க சனி பகவான் காத்திருந்தார். எப்படி பிடிப்பது? என்று சிந்தித்து கொண்டு இருக்கும்போது நளன், எங்கோ வெளியில் சென்று திரும்பி வந்ததும் சரியாக கால்பாதத்தை தண்ணீரால் கழுவாமல் இருந்ததால் சனிஸ்வரர் நளனை பிடிக்க வழி கிடைத்தது. உடனே நள சக்கரவர்த்தியை சனிபகவான் கால் பாதத்தின் வழியாக பிடித்து, நளனின் வாழக்கையை சின்னாபின்னமாக்கினார். கால் பாதத்தின் வழியாக பிடித்த காரணத்தால் நளனை, ஒரு இடத்தில் கூட நிம்மதியாக இருக்கவிடாமல் துரத்தியடித்தார் சனிபகவான்.

 தன் நாட்டைவிட்டு வேறு ஊரிலும் காட்டிலும் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார் நளன். கட்டிய மனைவியை கூட காப்பாற்ற முடியாமல் தமயந்தியை தனியாக காட்டிலேயே விட்டுச் சென்றார்.

தமயந்தியும் பல இன்னல்களுக்கு ஆளாகி, ஒரு நல்லவரின் தயவால் சேதி நாட்டுத் தலைநகரில் இருக்கும் அரசியிடம் தமயந்தியை வேலைக்கு அமர்த்தப்பட்டாள். சில மாதம் கழித்து தமயந்தியின் சகோதரரின் நண்பர் தமயந்தியை பார்த்து, “நீ வீமன் மகள் தமயந்திதானே.“ என்றார். “ஆமாம்என்று தலையசைத்தாள் தமயந்தி. இதை கண்ட அரசி,  “என்னதமயந்தியா…? என் சகோதரியின் மகளா…?“ என்று கூறி அவளை கட்டிபிடித்து, “அடையாளம் தெரியாதபடி ஒரு பணிப்பெண்னை விட மோசமாக இருக்கிறாயே.“ என்று கண்ணீர் விட்டாள் அரசி.

 அதன் பிறகு பல சம்பவங்கள் நடந்து, எங்கெங்கோ அலைந்து அல்லல்பட்ட நளனும் தமயந்தியும் மீண்டும் சந்தித்தார்கள். பிறகு பல கோவிலுகளுக்கு மனைவியை அழைத்து கொண்டு யாத்திரை சென்றார் நளன். அப்போது ஒருசமயம் பரத்வாச முனிவர்,

 “நீ திருநள்ளாறு செல். அங்கு இருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி திருநீற்றை அணிந்துக்கொள். உன்னை பிடித்து ஆட்டும் சனிபகவான் விலகுவான்.“ என்றார்  முனிவர்.

முனிவர் கூறியது போல் திருநள்ளாறு சென்று, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார் நளன். தன் கடமை முடிந்தது என விலகினார் சனிபகவான். சனி பிடித்திருந்ததால் உருவம் மாறி கறுத்து போயிருந்த நளனின் சரீரம், பழைய தேஜசுக்கு திரும்பியது. இவ்வாறு சனிஸ்வரரால் அவதிப்படுபவர்கள், திருநள்ளாறு சென்று அங்கு இருக்கும் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும், போகமார்த்த பூண்முலையம்மையை வணங்கி சனீஸ்வரரையும் வணங்கினால் தோஷங்கள் நீங்கி சந்தோஷமான வாழ்க்கை அமையும் உறுதி.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 






© 2016www.bhakthiplanet.com All Rights Reserved