Tuesday, November 17, 2015

ஐயப்பன் சுவாமி வரலாறு பகுதி – 2


சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்



ஐயப்பனின் மீது பகையாக இருந்த பந்தள நாட்டின் மந்திரி, தம்முடைய துஷ்ட திட்டங்களை நிறைவேற்ற அரசியின் துணை இருந்தால்தான் இயலும் என்பதை புரிந்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஐயப்பனை பற்றி ஏதேனும் குறை சொல்வதையும், “காட்டில் கிடைத்த தத்துபிள்ளை இந்த நாட்டை ஆளுவதை விட, நீங்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை இராஜராஜன்தான் ஆள வேண்டும், அதைதான் மக்களும் விரும்புவார்கள்என்று அரசாங்க விஷயங்களில் தலையிட விரும்பாத மக்களையும் பேச்சில் இழுத்தான். ஆரம்பத்தில் ஐயப்பனின் மீது பிள்ளை பாசத்துடன் இருந்த அரசி, மந்திரியின் பொறாமை சொல்லை கேட்டு அமைச்சரை எச்சரித்தாள். ஆனாலும் அமைச்சர் ஐயப்பனுக்கு எதிரான தன் பேச்சைவிடுவதாக இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அரசியிடம் பேசி, அரசிக்கு ஐயப்பன் மீதுள்ள பாசத்தை நீக்கிட முயன்றான்.

ஒருநாள் அமைச்சர் தன் திட்டத்தில் ஜெயித்தான்.
 
தாம் வயிற்றில் சுமந்து பெற்ற மகன் இராஜராஜனே அரச வாரிசு. அவனே நாடாள தகுதியானவன் என்கிற முடிவுக்கு வந்தாள் அரசி. “இதை எப்படி அரசருக்கு சொல்வது? நான் சொன்னால் அவர் கேட்க மாட்டார் அமைச்சராகிய நீங்களே அரசருக்கு சொல்லுங்கள்.” என்றாள் அரசி.

அய்யய்யோஐயப்பன் நாடாள கூடாது என்று நீங்கள் சொன்னால், உங்களை நாட்டைவிட்டுதான் அரசர் துரத்துவார். அதையே நான் சொன்னால் இந்த பூலோகத்தைவிட்டே என்னை துரத்துவார். அதனால் என்னிடம் வேறு ஒரு திட்டம் இருக்கிறது.” என்றான் மந்திரி.

அரசி, “என்ன அது?.” என்றாள்.

உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்பது போல நீங்கள் நடிக்க வேண்டும். அப்போது நான் ஏற்பாடு செய்த வைத்தியர் வருவார். நீங்கள் உடல்நலம் பெற, புலியின் பாலே மருந்து என்பார். புலிபாலை எவன் கொண்டுவருவான்.? யாராலும் முடியாது. உங்கள் மீது உள்ள பாசத்துக்காக மணிகண்டன் செல்வான். பிறகென்ன, காட்டுக்கு போனவன் நாடு திரும்ப மாட்டான். காரணம், புலியின் பால் அவனுக்கு கிடைக்காது. புலிக்குதான் அவன் உணவாவான்.” என்றான் மந்திரி.

அமைச்சர் சொன்னது போல் அரசி, தனக்கு  தலைவலிப்பதாக நடித்து . அரசர் தன் மனைவியின் வேதனை கண்டு துயரம் அடைந்தார். அரசு வைத்தியர்கள் அழைக்கப்பட்டனர். அரசியின் தலைவலிக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாமல், வைத்தியர்களின் தலைதான் வலித்தது. அரசிபடும் வேதனை பார்த்து மன்னர் கண் கலங்கினார். “ஈஸ்வராஇது என்ன சோதனை.? இவளின் வேதனைக்கு என்னதான் மருந்து.?” என்று வேண்டினார். அப்போது சதிகார மந்திரி அரசரை சந்தித்தான். தனக்கு தெரிந்த வைத்தியரை வரச் சொல்லி இருப்பதாக சொல்லி, ஒரு வைத்தியரை அழைத்து வந்தான்.
துடித்தாள்

வைத்தியர் அரசியை சோதித்து பார்த்தான். ஏதேதோ மருந்து தருவது போல நடித்தான். எந்த மருந்தும் வேலை செய்யவில்லை என்று அரசியும் வைத்தியனை விட சிறப்பாக நடித்தாள். கடைசியாக மந்திரி சொல்லி தந்ததை அப்படியே சொன்னான் வைத்தியன்.

அரசே..அரசியின் வேதனை தீர ஒரு மருந்து இருக்கிறது. ஆனால்….. அது கிடைப்பது அரிது.” என்றான் வைத்தியன்.

வைத்தியரே. நீங்கள் கேட்கும் மருந்து இமயமலையில் இருந்தாலும் சொல்லுங்கள். அதை கொண்டு வருகிறோம்.” என்றார் அரசர்.

அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம். அது காட்டில்தான் இருக்கிறது.”

காட்டிலாஅது என்ன மூலிகை.?”

மூலிகை அல்ல. அது பால்.”

பாலாஎன்ன பால்.?”

புலி பால்

அதிர்ந்து போனது அரண்மனை.

புலிக்கு மயக்க மருந்து எதுவும் தராமல். பால் எடுக்க வேண்டும். இதுதான் ஒரே மருந்து.” என்றான் வைத்தியன்.

புலிபாலை யார் கொண்டு வருவார்கள் என்று அரசர் யோசித்த போது, புலிக்கு யாரையும் பலி தந்துவிடக் கூடாது என்று நினைத்த ஐயப்பன், “புலிபால் நான் கொண்டு வருகிறேன்.” என்றார்.

இதை கேட்டு, அரசர் திடுகிடுவதற்கு முன்னதாக அரசியும் மந்திரியும்தான் திடுகிட்டார்கள். காரணம், புலிபால் கொண்டு வர யாரை அனுப்பலாம் என்று அரசர் கேட்பார். மணிகண்டனை அனுப்பலாம் என்று நாம் சொல்லாம் என்று நினைத்த அவர்கள், இப்போது யாரும் கேட்காமலேயே மணிகண்டன், “நான் கொண்டு வருகிறேன்.” என்று துணிந்து சொன்னதை கேட்டுதான் இந்த திடுகிடு அந்த சதிகாரர்களுக்கு.

ஆனாலும் ஒரு அற்ப சந்தோஷம் அவர்களுக்கு உண்டானது. அது எதனால் என்றால், காட்டில் புலி தாக்கி ஐயப்பன் இறந்தால், “அவனாகவேதானே காட்டுக்கு போனான். நாங்களா அனுப்பினோம்.” என்று சொல்லி தப்பித்துவிடலாம் என்று சந்தோஷப்பட்டார்கள்.

அரசரும், தம்பி இராஜராஜனும் பதறினார்கள். “ஆபத்தான இந்த செயல் வேண்டாம்.” என்று தடுத்தார்கள்.

இதில் பெரிய சதிதிட்டம் இருக்கிறது என்று தெய்வகுழந்தைக்கு தெரியாதா .” தந்தையே எனக்கு எந்த ஆபத்தும் நேராது.“ என்று தந்தையை சமாதானப்படுத்தினார் ஐயப்பன்.
என்ன

ஐயப்பன் இரவு நேரத்தில் காட்டில் தனியாக இருப்பாரே என்று வெளிச்சத்திற்காக காட்டில் தீபம் ஏற்ற, ஒரு தேங்காயில் நெய் ஊற்றி தந்து அனுப்புகிறார் அரசர் இராஜசேகரன்.

புலி கூட்டத்துடன் வந்த ஐயப்பன்

காட்டுக்கு சென்ற ஐயப்பன், பொன்னம்பல மேட்டில் தவம் இருந்தார். அப்போது தன் தந்தையான ஜயந்தனை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்றார். பிறகு பெரும் புலி கூட்டத்தை திரட்டினார் ஐயப்பன். ஐயப்பனுடன் அந்த புலிகள் யாவும் அமைதியாக காட்டில் சுற்றி வந்தது. ஒரு புலியின் மீது அமர்ந்து ஐயப்பன் காட்டில் இருந்து நாட்டுக்கு புறப்பட்டார். அவருடன் புலி கூட்டமும் வந்தது.

ஐயப்பன் புலி மேல் அமர்ந்தப்படி பெரும் புலி கூட்டத்துடன் வருவதை கண்ட பந்தள நாட்டு மக்கள் அதிர்ந்தார்கள். அரண்மனைக்கு தகவல் பறந்தது. அரசரும், அரசியும் இந்த காட்சியை பார்த்து அதிசயித்தார்கள். அரசி, தன் தவறை உணர்ந்து ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டார்.

வாபர்

வாபர் என்ற இஸ்லாமியர். இவர் ஒரு கடற்கொள்ளையர். கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார். எந்த அரசர்களாலும் வாபரை பிடிக்க முடியாமல் திண்டாடினார்கள். வாபர், தாம் கொள்ளையடித்த செல்வங்களில் ஒரு காசு கூட தனக்காக வைத்துக்கொள்ளாமல் ஏழைகளுக்கே உதவி செய்வார்.

என்னதான் இருந்தாலும் கொள்ளையடிப்பது சட்டப்படி குற்றம் ஆகையால், எப்படியாவது வாபரை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள் பல நாட்டு அரசர்கள். அதனால் ஐயப்பனிடம் உதவி கேட்டார்கள்.

வாபரை சந்திக்க சென்றார் ஐயப்பன். ஐயப்பனை பார்த்த வாபர், “என்னிடம் போர் செய்ய குழந்தை வந்துள்ளது.” என்று கூறி சிரித்தார்.

ஐயப்பன் போரிட்டார். ஐயப்பனின் போர் திறமையை கண்ட வாபர் மணிகண்டனுக்கு அடிபணிந்தார். வாபர் கொள்ளையராக இருந்தாலும் அவரின் நல்ல குணம் ஏற்கனவே ஐயப்பனுக்கு தெரிந்திருந்ததால் வாபரை தன் நண்பராக ஏற்றுக் கொண்டார்.

சாஸ்தா சிலையை மீட்டார்கள்

உதயனிடம் இருந்து சாஸ்தாவின் விக்கிரகத்தை மீட்டு கோயில் கட்ட எண்ணினார் ஐயப்பன். சாஸ்தாவின் விக்கிரகத்தை தன் தந்தை ஜயந்தனே தன் கையால் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று விரும்பிய ஐயப்பன், பொன்னபல மேட்டில் தவம் செய்யும் தந்தை ஜயந்தனை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார். ஜயந்தனும் அதை ஏற்றுக் கொண்டார்.

உதயனின் பிடியில் இருந்த சாஸ்தாவின் விக்கிரகத்தை வாபரின் துணையுடன் பெரும் படையுடன் சென்று போர் செய்து மீட்டார் ஐயப்பன். சாஸ்தாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று அரசர் இராஜசேகரரிடம் ஐயப்பன் சொன்னார்.  “எந்த பகுதியில் கோவில் கட்டுவது.?” என்றார் அரசர்.

ஐயப்பன் அரசரை தன்னுடன் அழைத்துக் கொண்டு காட்டுபகுதிக்கு சென்று ஒரு அம்பை வீசினார். அந்த அம்பு எஙகு விழுகிறதோ அந்த இடத்தில் நீங்கள் எனக்கு கோவில் கட்டிதாருங்கள்.” என்றார்.

ஐயப்பன் வீசிய அம்பு இன்று சபரிமலை நாம் போற்றுகிற இடத்தில் விழுந்தது. அந்த இடத்திலேயே சாஸ்தாவுக்கு கோவில் கட்டினார்கள்.

அநத கோவிலில் சாஸ்தாவின் விக்கிரகத்தை ஐயப்பனின் தந்தையான ஜயந்தன் தன் கையால் பிரதிஷ்டை செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஐயப்பன் திடீரென ஒரு தெய்வஒளியாக மாறி சாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமானார். இதை பார்த்த அரசரும் மற்றவர்களும் சாஸ்தாவின் அவதாரமே ஐயப்பன் என்பதை உணர்ந்தார்கள். ஐயப்பனுடன் கடைசிவரை நண்பர் வாபர் துணையிருந்ததால், “நண்பரே, என்னை தரிசிக்க வருபவர்கள் உன்னையும் தரிசிப்பார்கள். உன்னை தரிசித்த பிறகே என்னை தரிசிக்க முடியும். அவர்களின் பயணத்திற்கு துணையிரு.” என்றார் ஐயப்பன்.

அதனால் இன்றுவரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் வாபரின் பள்ளிவாசலுக்கு சென்று வணங்கிய பிறகே ஐயப்பன் கோயிலுக்கு செல்கிறார்கள்.

இன்றுவரை வரும் கருடன்

என் மகனே..கல்லும் முள்ளும் நிறைந்த பாதையும் தெரியாத இந்த இடத்திற்கு வந்து இனி எப்படி வந்து உன்னை நான் பார்ப்பது?” என்று கலங்கினார் பந்தள அரசர் இராஜசேகரர்.

கவலைவேண்டாம். என்னை காண இந்த காட்டு பகுதிக்கு வரும் போது, உங்களுக்கு கருடன் வழிகாட்டுவான்.” என்றார் ஐயப்பன்.

ஐயப்பன் கூறியது போல் அரசர் ஐயப்பனை தரிசிக்க காட்டுக்கு வரும் போதெல்லாம் கருடன் வழிகாட்டினார். அன்று முதல் இன்றுவரை ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருக்கும் நகைகள் கொண்டு வரும் போது, கருட பகவான் நகைப்பெட்டி கொண்டு வருபவர்களுக்கு வழிகாட்டுவதுடன், அந்த நகைப்பெட்டிக்கும் பாதுகாப்பாக வருகிறார்.

சாஸ்தாவின் மறு அவதாரம்

ஸ்ரீமந் நாராயணனே ஸ்ரீராமர், கிருஷ்ணர் என்று அவதாரம் எடுத்தது போல், சாஸ்தாவே ஐயப்பனாக அவதாரம் எடுத்தார் என்கிறது ஐயப்பன் வரலாறு.

வெற்றி படிகள்

வாழ்க்கையில் எப்படி முன்னேறுவோம் என்ற ஐயத்தை போக்கி, நம்பிக்கையான மனமும், சக்தியான உடல்நிலையும் தந்து என்றென்றும் நம்மை நிழல் போல் காக்கும் தெய்வம் நம் ஐயப்பன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் சபரிமலையின் பதினெட்டு படிகள் ஏறினால், அதுவே நமக்கு பல ஜென்மங்களுக்கும் வெற்றிபடிகளாக அமையும்.


ஸ்வாமியே….. சரணம் ஐயப்பா

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 










© 2015www.bhakthiplanet.com All Rights Reserved