Saturday, May 11, 2013

குரு குணங்கள் – ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

விஜய் கிருஷ்ணாராவ்.
தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார்.

“ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார்.  

“எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்!

“ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. ஆயினும் சக்தியை எப்போது சந்தித்து முறையிடுவது? அதற்கு ஜோதிட ரீதியாக தாங்கள் கூறும் நல்லலோசனையாது?”

“தேவந்திரா… அதற்குரிய ஆலோசனையை நமது பிரம்மதேவர் கூறுவதை காட்டினும், குருபகவான் சொல்வது சாலச்சிறந்ததாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்!” என்றார் நாரதர்.

“நாரதரின் வில்லங்க வலையில் இன்று நான்தான் சிக்கினேனோ!” என்று புன்னகைத்தவாரே கேட்டார் குருபகவான்.

“எவரும் எனை சந்தேகக் கண் கொண்டு நோக்கினால், நான் என் செய்வேன்?”
“அதற்குள் கவலை கொண்டீரே நாரதரே. நான் வேடிக்கையாகதான் சொன்னேன். அதனையே விவாகரமாக்கிவிடாதீர்!”

நாரதர், “பார்த்தீர்களா பாத்தீர்களா மறுபடியும்….?”

“சரி சரி… சபை கூடிய விஷயத்திற்கு வாருங்கள். தேவகுருவே, பார்வதி மகாதேவியை எப்போது சந்திக்க நலமென ஆருடம் பார்த்து அருளுங்களேன்.” என்ற இந்திரனின் வார்த்தைக்கு மதிப்பளித்து குருபகவான், அன்றைய கிரக நிலைகளை ஆராய்ந்து இன்னும் சில நாழிகைகள் கழித்து செல்வது நல்லது என்றார்.

இந்திரன்,“அதன் காரணம் அறியலாமோ!”

“இந்த நாழிகையில் பராசக்தி ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறார் என்பதினை கிரக நிலைகளை கொண்டு அறிந்தேன்.”என்று அதற்கு விளக்கமளித்தார் குரு பகவான்.

“ஆச்சரியமாக இருக்கிறதே? இந்த நாழிகையில் ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கூட கிரக நிலைகளை ஆராய்ந்து சொல்ல முடியுமா?” என்று கேட்டார் தேவேந்திரன்.

“நிச்சயமாக! அதில் என்ன சந்தேகம்.? துல்லியமாக ஆராய்ந்தால், பார்வதிதேவி ஸ்நானம் செய்து கொண்டிருப்பதையும் சொல்ல முடியும் மேலும் அவர் பரமேஸ்வரரோடு எந்த நாழிகையில் ஐக்கியமாக இருப்பார் என்பதையும் சொல்ல முடியும்.” 

இப்படி அதற்கு பிரம்ம தேவரும் விளக்கமளிக்க சபையில் இருந்த இந்திராணியும் ரிஷி பத்தினிகளும் நாணத்தாள் தலைகுனிந்து சிரித்துகொண்டார்கள்.

அதை கவனித்த நாரதருக்கு அன்றைய கலக்கத்திற்கு காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் சபையிலிருந்து உத்தரவு பெற்று நழுவினார்! அவர் நேராக சென்ற இடம் திருகயிலாயம்.

அச்சமயம் பார்வதி நீராடி முடித்து, தியானத்தில் அமர்ந்திருந்தார். நாரதர் வந்திருப்பதை அறிந்து அவரை வரவேற்றார்.!

சக்தியை நமஸ்கரித்து அருளாசிபெற்று, லோகவிஷயங்களை பேசி முடித்த நாரதர், அமராவதியில் இந்திர சபையில் குருபகவானும், பிரம்மதேவனும் ஜோதிடம் பார்த்து, கடந்த நாழிகையில் தாங்கள் ஸ்நானம் செய்து கொண்டிருந்ததை துல்லியமாக சொல்லிவிட்டார்களே என்று மெதுவாக கலகத்தையும் தொடங்கி வைத்தார்.

“இதில் என்ன குழப்பம் நாரதா? ஜோதிடத்தில் யாவும் அறிய முடியும் என்று அக்கலையில் சிறந்த உனக்கு தெரியாதா?”

“இருக்கலாம். அதற்காக….“

“சொல்ல வருவதை தயங்காமல் சொல்“

“ஒருவருடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றையும் சொல்லட்டும், சொல்ல வேண்டியது ஒரு ஜோதிடனின் கடமையாக கூட இருக்கலாம். ஆனால் இந்த நாழிகையில் யார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை.. அந்தரங்க விஷயத்தையும், அதுவும் குறிப்பாக லோகமாதாவாகிய தாங்கள் ஸ்நானம் செய்து கொண்டிருப்பதை பலர் கூடி இருக்கும் சபையில் பகிரங்கமாக அறிந்து சொல்வது ….”

“நாரதா“

“இல்லை தாயே, லோகசக்தியாக விளங்கினாலும் தாங்களும் பெண்தானே. ஒரு பெண் ஸ்நானம் செய்வதையோ அல்லது தன் கணவரோடு அந்தரங்கமாக இருக்கும் விஷயத்தையோ, முப்பத்தி மூன்று கோடி தேவதைகள், எண்பத்தெட்டாயிரம் முனிவர்கள் நிரம்பிய சபையில் எப்படி இன்னொருவர் சொல்லலாம்.? இந்திராணியும் அதற்கு வருத்தப்பட்டார்”

“புரிகிறது நாரதா! குருபகவான் செய்தது தவறுதான். இதற்கு இன்றே ஒரு முடிவு கட்டுகிறேன்”.

நாரதர் கலகத்தை ஞானத்தால் உணர்ந்த பிரம்ம தேவரும் குருபகவானும், அவசர அவசரமாக பராசக்தியை காண ஒடிவந்து வணங்கினார்கள். 

“தேவ குருவே.. நீங்கள் செய்த தவறு மன்னிக்க முடியாதது. ஜோதிடத்தில் நீங்களும், பிரம்மதேவரும், ஏன் இதோ நிற்கிற நாரதரும் வல்லவர்கள் என்பதை நான் அறிவேன். ஆயினும் ஒருவரின் அந்தரங்க விஷயங்களை அறிய முயல்வதும், அறிந்ததை பகிரங்கப்படுத்துவதும் பாபம் என்பதை தெரிந்தும் தவறு செய்து விட்டீர்கள். ஆகவே ஜோதிடத்தில் இனி கடந்தகாலம், எதிர்காலம், அறிந்து சொன்னாலும் நிகழ்கால நாழிகையில் நிகழ்வதை அறிந்து சொல்கிற ஆற்றல் இன்று முதல் இயலாது. அந்த ஆற்றலை ஜோதிடத்தில் இருந்து நீக்குகிறேன்!”

“தாயே இது என்ன அவசர சட்டமாக இருக்கிறதே” அதிர்ச்சியோடு அலறினார்கள் மூவருமே.

“பிரம்ம தேவரே நீர் செய்த தவறுக்கு தண்டனை பெற வேண்டும். மக்களின் வழிபாடும் ஆராதனையும் உங்களுக்கு கிடைக்கப்பெறாது. என் அண்ணன் பரந்தாமனை வழிப்பட்டு உங்கள் பதவியையாவது தக்க வைத்து கொள்ளுங்கள்.”

பராசக்தி, குரு பகவானை நோக்கினாள்.

“தேவகுருவே…நீர் செய்த தவறுக்கும் தண்டனை பெற வேண்டும். ஆக இனி எவர் ஜாதகத்தில் நீர் தனித்து நின்றாலும் அந்த இடம் பாழ்படும்”  

“தாயே இது கொடுமையான சாபமன்றோ. தயவு காட்டுங்கள் தாயே”

“நீர் தனித்து நிற்கும் இடம் பாழ்படுமே தவிர, உங்கள் பார்வைபடும் இடம் கோடி புண்ணியங்களை பெறும். மற்றவர்கள் தவறு செய்தால் அந்தணனை அணுகி பாப விமோசனம் பெறலாம், அந்த அந்தணனே தவறு செய்தால் இதுதான் தண்டனை”

“தாயே…நான் தனித்து நிற்கும் இடம் மட்டும்தானே பாழ்படும். என்னோடு மற்ற கிரக தேவர்கள் இருந்தால்….?”

சக்தி, “இருக்கின்ற இடத்திற்கேற்ப நல்ல பலன்கள் அமையும்.”

இப்படிதான் ஜோதிடத்தில், “அந்தணன் (குரு) தனித்து நின்றால் அபகீர்த்தி மெத்தமும் உண்டு என்கிற முதுமொழி தோன்றியது. எந்த ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் குரு தனித்து நின்றால், அந்த இடத்திற்கு (அ) வீட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும்.

அதுவே -

அந்த ஜாதகத்தில் குருவோடு மற்ற கிரகங்கள் கூடி நின்றால், அதற்குரிய பலன்களை பெற முடியும். தனித்து நிற்கிற குரு நல்ல பலன்களை செய்வதில்லை. உதாரணமாக, வண்டி, வீடு, உற்றார் – உறவினர் நிலையை காட்டுகிற நான்காம் இடத்தில் குரு தனித்து நின்றால் உறவினர் பகை, வீடு – வாகன இழப்பு போன்றவை காணும்.

அதுபோல ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தில் குரு தனித்து நிற்பதாக இருந்தால், அந்த பாவம், பூர்வ புண்ணிய புத்திரஸ்தானமாக இருக்கிறபடியால், அந்த பாவத்தில் குரு தனித்திருந்தால், பூர்வ புண்ணிய குறைபாடுகளால் தன் புத்திர – புத்திரிகள் மூலமாக அந்த ஜாதகருக்கு தொந்தரவுகளும் மன அமைதியும் சீர் கெடுகிறது.

இப்படியே -

குருபகவான் எந்த பாவத்தில் தனித்து நிற்கிறாரோ அதற்குரிய பலன்களை அறிய வேண்டும். அதற்காக குரு தனித்து இருக்கிற ஜாதகங்களை தோஷ ஜாதகங்கள் என்றும் சொல்லிவிட முடியாது. கூடாது.

அந்தந்த பாவத்திற்குரிய நல்ல பலன்கள் குறைகிறது என்பதை மட்டும் சொல்ல வேண்டும்.

எத்தனையோ புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களில் குரு தனித்து நிற்கிறார். அதில் ஸ்ரீராமகிருஷ்ண பரமாஹம்சர், முன்னால் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, கண்ணதாசன், ரஜினிகாந்த் என்று இப்படி இன்னும் பல புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களில் கூட குரு தனித்து இருக்கிறார்.

இதனால் -

அத்தகைய ஜாதகங்களை தோஷமான ஜாதகங்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல குரு எந்த பாவத்தில் தனித்து இருக்கிறாரோ அதற்குரிய பாவ பலன்கள் குறைகிறது என்பதையும் மறுக்க முடியாது. குருவினால் ஒரு ஜாதகருக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கப்பெறுகிறது.

மேஜர் பிளானெட் வரிசையில் குரு முக்கிய பங்கு வகிக்கிறது. எண்கணித ரீதியாக மூன்றாம் எண் குருவையே குறிக்கிறது. இந்த எண்ணில் பெயர் அமைந்தால் எந்த வேலையும் நிதானமாகவும், சற்று காலதாமதமாக செய்பவராகவும் இருப்பார்கள். இது, தோல் தொடர்பான வியாதிகளை தரலாம்.
ஆனாலும் ஜாதகத்தில் குரு பகவான் தோஷமின்றி இருக்க மூன்றாம் எண் கை கொடுக்கும். சீரான செல்வ நிலைக்கும், சீரற்ற செலவு நிலைக்கும் குருவே காரணம்.

ஜாதகத்தில் குருதோஷம் இருந்தாலும், குரு உன்னதமான இடத்தில் இருந்தாலும், கனகபுஷ்பராக கல்லை குரு விரலில் மோதிரமாக அணிந்தாலும், மஞ்சல் நிற ஆடைகளை அணிந்தாலும் குரு குணங்களால் உயர்வு பெறலாம் என்கிறது சாஸ்திரம்.

ஓம் ஸ்ரீ குருவே நமஹ

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved